முன்னுரை
தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷங்ளாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது. பழந்தமிழ் மக்களின் வாழ்வியல்,
பண்பாடு,
அக்காலச்சுழல்,
பழக்கவழக்கங்கள் போன்றவைகளை எடுத்துக்கூறும் பதிவேடாக, பாட்டும் தொகையும் விளங்குகின்றன. இந்நிலையில்,
எட்டுத்தொகை நூல்களை
ஆராய்ந்து, பழந்தமிழ் மக்களின் சமுக அமைப்புகள்,
அவர்களின் உணவு முறைகளின் வாயிலாகப் பயிரினம் பற்றிய தகவல்களை எடுத்துக்கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்க
காலச்சமுகம்
பல்வேறு மனிதர்களும் பல குடும்பங்களும் ஒருமித்து வாழ்கின்ற இடம் தான் சமூகம் எனக் கருதமுடிகிறது. “தனிமனிதன் ஒவ்வொருவனும் தான் சார்ந்த சமூகத்திற்குத் தன் பங்களிப்பைச் சரியாகச் செய்யும்போது சமூகம் வளர்ச்சியடைகிறது. உணவு தேடுதல்,
புறப்பகையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல்,
இனப்பெருக்கம் செய்தல் ஆகிய இன்றியமையாத தொழில்களே மனிதனுக்குக் குடும்பம்,
சமூகம் ஆகியவற்றைத் தொடக்கத்தில் கற்பித்திருக்கின்றன”1 எனும் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். சமுக அமைப்புகளின் வழியாகவே புதிய நிகழ்வுகளும்,
தனிமனிதப்பண்பாடும்,
ஒழுக்கங்களும்,
உணவு முறைக்கான வழி முறைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.
உணவுமுறைகள்
சங்க காலத்தில் மக்கள் தங்கள் நிலத்திற்கு ஏற்ற பயிரினைச் செய்து,
தானும் உண்டு மற்றவர்களுக்குக் கொடுத்தும் விருந்தோம்பல் செய்தும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளனர்.“வரகுக் குதிர்கள் நிற்கும் முன்றில், வரகு வைக்கோல் வேய்ந்த குடில், வரகுச் சோறும் அவரைப் பருப்புமாகிய உணவு ஆகியவற்றைக் கொண்டது.செந்நெல் வெண்சோறும்,கருணைக்கிழங்குக் கறியும் தலைவர் வரவு கூறும் காக்கைக்குப் பலிச்சோறாக இடம்பெறும் இயல்பினது”2 என்ற செய்தியானது அவர்கள் வாழ்ந்த
முறையினை
விளக்குகிறது. நிலத்தையும் காலத்தையும் பிற இயற்கைப்பொருள்களையும்
பகுத்து,
பயிர் செய்து வாழ்ந்து வந்தனர் பழந்தமிழர்கள்.
இவர்கள் நிலத்தாலும் செய்யுந்தொழிலாலும் வேறுபட்டுருந்தாலும் மொழியால் ஒன்றுப்பட்டு வாழ்ந்தனர் என்பது சங்க இலக்கியப் பாடல்களின் வழி புலனாகின்றன. ”தமிழர்களின் வாழ்க்கை முறையினையும் தமிழிலுள்ள சொற்கோவை இனிது எடுத்துக்காட்டுகிறது. வைகறை,
விடியல்,
காலை,
பகல்,
நண்பகல்,
மாலை,
அந்தி,
இரவு,
நள்ளிரவு,
நாள்,நடுநாள், வைகல்,
உவா,
பருவம் எனக்காலத்தையும் நேரத்தையும் பகுத்துணர்ந்தமை,
மழையைக்குறித்து
எழிலி,
கார்,
கொண்டல்,
கொண்மூ,
செல்,
புயல்,
மஞ்சு,
மாரி,
முகில்,
மை,
வான் என அதன் பல நிலையைக் குறித்தும் சொற்கள் வழங்குகின்றமை ஆகியன இயற்கையை ஒட்டிய அவர்களின் வாழ்நெறியையும்,
இயற்கையின்பால் கொண்ட கூர்ந்த நோக்கினையும் காட்டுகின்றன”3 எனும் கருத்தானது அவர்களைப்பற்றிய மேலும் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கிறது.
பயிரினம்
”வீட்டிற்குப் போனா மனைவி அழகாக இருக்கனும் வயலுக்குப் போனா பயிர் அழகாக இருக்கனும்” என்னும் நாட்டுப்புறப் மக்களின் பழமொழிக்கு ஏற்ப பழந்தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தங்களுடைய உணவுக்குத் தேவையான பயிர்களையும் வருமானம் தரக்கூடிய பயிர்களையும் அதிகமாகப் பயிர் செய்துள்ளனர். நெல்,
கரும்பு,
தினை,
முதலியன முக்கிய பயிராக இடம்பெற்றுள்ளன.
சங்க காலத்தில் நிலத்துக்கு ஏற்ற நீர் எப்பொழுதும் கிடைத்திருக்கிறது. நிலத்தின் தன்மையைப் பற்றி சிறப்பாகப் பதிற்றுப்பத்தின் பாடல் எடுத்துரைக்கிறது. பன்றிகள் தம்முடைய கொம்புகளால் கிண்டிப் புழுதியாக்கின நிலத்தைப் பிறகு ஏரினால் உழத் தேவையில்லை. காலால் குழப்பி விதை விதைக்கும் வயல்களாய் விளங்கும் என்பதைக் கீழ்க்கண்ட பாடல் உணர்த்துகிறது.
”தொறுத்தவயல் ஆரல் பிறழ்நவும்
ஏறுபொருத செறு உழாது வித்துநவும்
கருப்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமையின் நிரைதடுக்குநவும்4…
உழவர்கள் காலையில் விதைப்பதற்கு மிகவும் ஆரவாரத்துடனும் விதையுடன் சிறு வட்டிகளையும் எடுத்துச்சென்றுள்ளனர். மேலும்,
இந்த உழவர்கள் பழங்கொல்லையை உழுத அனுபவமிக்கவர்கள். இத்தகைய உழவர்கள்,
வீண்படாமல் உழுவதற்கு விரைதலைப் போல,
என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்றது எனத் தலைவன்
”ஆடு
அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர்
அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ்
சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெருவிதுப்பு உற்றன்றால் நோகோ யானே”5 இப்பாடலின் வழியாக கூறுவதன் முலமாக உழவர்கள் பற்றிய சிறப்பினை அறியமுடிகின்றன.
பழந்தமிழ் மக்கள் காட்டை அழித்து புதிய விளைநிலமாக மாற்றியுள்ளனர். அந்நிலத்திற்கு ”புதிய கொல்லை” எனப் பெயரிட்டுள்ளனர். அதில் வரகு நெல்லை பயிர் செய்துள்ளனர். போர் எழும்போது மட்டும் உழவர்கள் உழவு கலப்பை முதலியவற்றை எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். அதனால் விளைநிலங்கள் கெட்டு அழிந்தன என்ற தகவலும் காணப்படுகின்றன. இவர்கள் பயிர் செய்யும் காலத்தில் நல்ல அறுவடை செய்துள்ளனர். நெல் விளையும் வயல்களில் நெய்தல் மலர்கள் மலரும். விளைந்த நெல்லை அறுக்கும்பொழுது,
அறுக்கின்றவரின் அரிவாள் வாய் மடங்கும் எனவும் கரும்பு வெட்டுபவரின் சாறுபிழியும் எந்திரம்,
கரும்புச்சாறு விழுகின்ற கூன் வாய் வளையும் எனவும் சிறப்பாக் குறிப்பிட்டுள்ளனர். இது இன்று நேற்று மட்டுமல்லாமல் தொன்றுதொட்டே இவ்வளங்கள் இருக்கின்றன எனக் கீழ்க்கண்ட பதிற்றுப்பத்தின் பாடல் வரிகள் முலமாகப் புலனாகின்றன.
”நெல்லின் செருவின் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாண் மடங்க அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை6…
நெல்லைப் பயிர் செய்யமுடியாதவர்கள்,
சில மீன்களைத் தந்து மிக்க நெல்லைப் பெற்றுள்ளனர் என்பதை ”சின்மீன் சொரிந்து பன்னெல் பெறூஉம்”7 எனும் பாடல் வரி உணர்த்துகிறது.
தினை
நெல்,கரும்பு, போன்று தினையும் முக்கிய பயிராக இருந்திருக்கின்றது. நெற் பயிர் விளையாத இடங்களில் தினையும் வரகும் பயிர் செய்துள்ளனர். தினைப்புனம் காப்பதற்குத் தலைவியும் தோழியும் செல்வதும், அவர்களைப் பின்தொடர்ந்து தலைவன் செல்வதும் முதலில் ஊடலும் பின் கூடலும் என்பது வழக்கமான ஒன்றாகும். தினைப்புனத்தைச் சிறு தினைப்புனம் என்றும் பெரிய தினைப்புனம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தினைப்பயிரின் இடையில் அவரையும் பருத்தியும் விதைத்துள்ளனர். பெரும் மழை பெய்தாலும் தினைத்தாளானது வாடாமல் இருக்கும் என்பது இதனுடைய சிறப்பாகும். இது கரும்பு போன்று அடியை உடையதாக இருக்கும் என்பதை
”யா அம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு”8…
குறுந்தொகைப்
பாடல் எடுத்துரைப்பதைக் காணலாம்.
கரும்பு
நெல்லுக்கு அடுத்த பயிராகப் பழந்தமிழ் மக்கள் கரும்பைப் பயிர் செய்துள்ளனர்.ஆயர் கரும்பைக் குறுந்தடியாக் கொண்டு மாவின் கனியை உதிர்ப்பர் எனும் கூற்றின் வழி, அக்காலக் கரும்பின் தரத்தினை அறியமுடிகிறது. நிலத்துக்கு அணிகலன்களாக, நெல்லும் கரும்பும் தான் எனக் கூறுகின்றனர். தலைவனைப் பற்றிச் எடுத்துக்கூறும்போது,மலர்ந்து விளங்கும் கரும்பும் விளைந்து சிறக்கும் நெல்லும் உடைய
கழனியூரன் எனக் கூறுவதை
“வாழியாதன்இ வாழி அவணி
பகைவர் புல்லார்க! பார்ப்பார்! ஓதுக!
எனவேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு
பழனமா கற்க எனவேட்டேமே!”9
இப்பாடலின் வழி
புலனாகிறது.
கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு இணையாக அக்காலத்தில் பசுக்களும் எருமைகளும் இருந்திருக்கின்றன. அவை உணவாகவும் மட்டுமல்லாமல் ஒருவருக்குச் சமுக மதிப்புத் தரக்குடியதாகவும் வயலில் பயிர் செய்வதற்கு உழுவு மாடாகவும் பயன்பட்டுள்ளன. இதனைக் கீழ்க்கண்ட ஜங்குறுநூறு
பாடல் உணர்த்துகிறது.
”வாழியாதன்,
வாழி அவினி
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க
எனவேட்டோளே யாயே! யாமே
வித்திய
உழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞல்
ஊரன் தன்மனை
வாழ்க்கை பொலிக எனவேட்டேமே!10
முடிவுரை
இவ்வாறாக,
எட்டுத்தொகை நூல்களின் மூலமாக, சங்க கால மக்கள் வாழ்ந்த முறையினையும் பயிர் செய்த பாங்கினையும்
அறியமுடிகின்றன. அவர்கள் வாழ்ந்த காலங்களில் போர் எழுந்த சூழல் தவிர, மற்ற காலங்களில்
நிலத்தில் பயிர் செய்து, நல்ல அறுவடையும் சுற்றத்தாருடன் மன நிறைந்த வாழ்க்கையினையும்
வாழ்ந்துள்ளனர் என்பதை இக்கட்டுரையின் வழி காணமுடிகின்றன.
அடிக்குறிப்புகள்
1.
கு.வெ. பாலசுப்பிரமணியன், சங்க இலக்கியத்தில்
சமூக அமைப்புகள், ப.2
2.
மேலது, ப.30
3.
மேலது, ப.7
4.
பதிற்றுப்பத்து, பாடல்.13
5.
குறுந்தொகை, பாடல்.131
6.
பதிற்றுப்பத்து, பாடல.19
7. ஜங்குறுநூறு, பாடல்.49
8. குறுந்தொகை, பாடல்.198
9. ஜங்குறுநூறு, பாடல்.4
10. மேலது , பாடல்.3
No comments:
Post a Comment