Friday, December 3, 2010

பேய் ஓட்டுதல்

பேய் ஓட்டுதல்

பேய் பற்றிய நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடையே இன்றும் நிலவுகிறது. பேய் இருக்கிறதா இல்லையா என்னும் ஐயத்திற்கு மக்களிடையே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பேய் பிடித்தவர்களுக்குச் சுயநினைவே இருக்காது எனவும் சொல்லப்படுகிறது. பேய் பிடிப்பதனால் ஏற்படுகின்ற பிறச்சனைகள் பேயை விரட்டுவதற்குத் தேவையான பொருட்கள் இந்தப் பிறச்சனையை அதிகம் சந்திக்கக்கூடியவர்கள் பேயை விரட்டக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் வீரபயங்கரம் எனும் கிராமமும் அங்குள்ள அய்யனார் கோயிலும் இவ் ஆய்வுக் களமாகும்.

பேய் ஓட்டுவோர்

பேய் ஓட்டுவோராகப் பெரும்பாலும் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். இருவராகவோ நால்வராகவோ இவ்வேலையைச் செய்கின்றனர். பெரும்பாலும் முனியப்பன் என அழைக்கப்படுகின்ற சின்னையாகோயிலில் பேய் ஓட்டுகின்றனர் .பேய் பிடித்தவர்களின் வீட்டிலேயும் பேய் ஓட்டுகின்றனர். பேய் ஓட்டுவோர் இதை ஒரு பகுதிநேர வேலையாகச் செய்கின்றனர். சில நேரங்களில் பேய் பிடித்தவர்ளைக் கோயிலுக்கு வரச்சொல்லியும்; பேய் ஓட்டுகின்றனர்.

இதற்கான செலவுகள் குறைந்தது ஜம்பது ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை ஆகும். பேய் பிடித்தவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப செலவுகள் அமையும். இதற்கான கால எல்லை ஒரு நாளிலிருந்து இரண்டு மூன்று வாரங்களுக்கு மேலும் நீடிக்கிறது. ஒரு நாளில் மூன்று வேளைகளில் கொலு வைக்கப்படுகின்றது. ‘கொலு’ என்பது பேய் ஓட்டக்கூடிய இடத்தைக் குறிக்கும் சொல்லாகும். விடியற்காலை பிற்பகல் மாலைநேரம் ஆகிய வேளைகள் அதற்கான நேரமாகக் குறிக்கப்படுகின்றன. ஓவ்வொரு வேளையின் போதும் குறைந்தது அரைமணி நேரம் பேய் ஓட்டுதல் நடைபெறும்.

தேவையான பொருட்கள்

பேய் ஓட்டுவோரின் எண்ணிக்கையைப் பொருத்து மணிகள் தேவைப்படும். இவற்றில் சாம்பிராணி முக்கியப் பொருளாக இடம்பெறுகிறது. திருநீர் திருநீர்த்தட்டு போன்றவை ஆரம்ப நிலைகளில் தேவைப்படக்கூடிய பொருட்கள். பேய் பிடித்துவிட்டது என வருகின்றவர்களை முதலில் கொலுவில் உட்கார வைத்து, சாமியைப் போற்றி சில பாடல்களைப் பாடுவார்கள். அப்பொழுது பேய் பிடித்த நபர் தலையை வட்டமாக அசைத்து ஆடினால் பேய் உள்ளது எனத் தெரிந்து கொள்வார்கள்.

முதல் கொலுவின் போது வண்ணங்களான ஆடைகளை அணிந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஓட்டுகின்றபோது வெள்ளைத் துணியை மட்டும் அணிந்து இருக்கவேண்டும். முதல் இரண்டு நாட்களில் எத்தனை பேய்கள் தன்னைப் பிடித்து இருக்கிறதோ அப்பேய்களின் பெயர்களைப் பேய் பிடித்த நபர் சொல்லி விடுவார். பின்னர் மூன்றாம் நாளிலிருந்து ஒவ்வொரு பேயினைப் பூசாரி பாட்டுப்பாடி அழைப்பார். முதலில் வருகின்ற பேய் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் தன்னைப் பற்றிய விவரங்களையும் இவர் எந்தப்பகுதில் வரும்போது எந்த இடத்தில் நான் இவரைப் பிடித்தேன் என்பதையும் எப்படி இறந்தேன் என்பதையும் சொல்லுகிறது.

உனக்கு என்னவேண்டும் எனப் பூசாரி பேயிடம் கேட்பார். பேய்களின் தன்மைக்கு ஏற்ப விருப்பங்கள் அமையும். அதாவது பெண்ணாக இருந்தால் ஒரு முழம் மல்லிகைப்பூ ரிப்பன் கண்ணாடி பவுடர் போன்ற பொருட்களைக் கேட்கின்றது. ஆண்பேய் பெண்களைப் பிடித்திருந்தால் பீடி சிகரெட் வெள்ளாட்டுக்கறி சாராயம; கடலைமிட்டாய் முறுக்கு போன்ற பொருட்களைக் கேட்கின்றது.
ஆண்பேயின் நடத்தைகள், பேச்சு, சிரிப்பு, பார்வை, ஆசைகள் ஆகியவற்றை எல்லாம் அப்படியே, பேய் பிடித்து இருக்கக்கூடிய பெண்கள் செய்வார்கள். இந்நிலையில் இக்காட்சியைப் பார்ப்பவர்களில் சிலர் பயப்படுவதும் உண்டு. குறிப்பாகக் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்.

ஒரு நபரைக் குறைந்தது ஜந்து பேய்களும் அதிகமாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட பேய்களும் பிடிக்கின்றன.ஒவ்வொரு பேயினையும் விசாரித்து, அதற்குத் தேவையான பொருட்களைக் கொடுத்துவிட்டு,சாமி சத்தியமாக,என்மீது சத்தியமாக உண்மையாக இந்தப் பெண்ணை இனி எந்த இடத்திலும் பார்க்கவும் பிடிக்கவும் மாட்டேன்” எனப் பூசாரி பேயிடம் சத்தியம் வாங்கிக்கொள்வார்.ஒவ்வொரு பேய்க்கும் அடையாளமாகத் தலையில் ‘முடி’ போடுவார்கள்.

இதே போன்று பிடித்திருக்கின்ற அத்தனைப் பேய்களையும் அவற்றிற்குத் தேவையான பொருட்களைக் கொடுத்துச் சத்தியம் வாங்கப்படுபிறது.பேய்களின் எண்ணிக்கையைப் பொருத்து நாட்கள் நீட்டிக்கப்படுபகின்றன.வராத பேய்களை வரவழைப்பதற்காகப் பேய் பிடித்த நபரை அடிப்பதற்கு, அடிப்பகுதி வெண்நிறத்திலும் நுனிப்பகுதி வாள் போன்ற வளைந்து பச்சை நிறத்திலும் உள்ள குச்சிகள், எருக்கங்குச்சிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இறுதி நாளில் பேய் பிடித்திருப்பவரைக் கொழுவில் அமரவைத்துச் சாமியை வணங்கிப் பாட்டுப்பாடுவார்கள்.பாடல்கள் பெரும்பாலும் சாமியின் சிறப்புகளைப் பாடுபொருளாக அமையும்.நேரம் ஆக ஆகப் பாடல்களை விரைவாகப் பாடுவார்கள். அதற்கேற்ப பேய் பிடித்திருப்பவரின் தலை ஆடும். ‘நான் போறேன், நான் போறேன் எனப் பேய் சொன்னவுடன், அவரின் தலையினைப் பிடித்துக்கொண்டு, கொலு வைத்த இடத்தை விட்டுவெளியில் வரும்போது, சேவல் ஒன்றைப் பிடித்து அதன் கழுத்தினைப் பேய் பிடித்திருப்பவரின் வாயில் வைப்பார்கள். அக்கோழியை ஒரே முறையில் தலைவேறாக,உடல்வேறாகக் கடித்து அப்பேய் கீழே துப்பிவிடும். பின்னர் மாட்டுச்சாணத்தைக் கரைத்துக், குடிக்கச்சொல்லி கொடுக்கின்றனர்.

பேய் பிடித்திருப்பவரின் தலையை ஒருகையில் பிடித்துக்கொண்டும் மற்றொரு கையில் மணியை ஆட்டிக்கொண்டும் பூசாரி பின்னே ஓடி வருவார் பேய் முன்னே செல்லும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள புளிய மரத்திற்கு ஓடி வருவார்கள். தலையில் முடிபோட்ட ஒவ்வொரு முடியினையும் மரத்தில் வைத்து ஆணி அடித்து அறுத்துவிடுவார்கள். இதுபோல முடிபோட்ட அத்தனை முடியினையும் அறுத்துவிடுவார்கள். பின் அருகில் உள்ள குளத்திற்கு அழைத்துச்சென்று, தலையில் தண்ணீர் ஊற்றி, கோடு கிழித்து, எழுமிச்சைப் பழத்தை அறுத்துச் சாறு விடுவார்கள்.

பின்னர் வருகின்ற பாதையின் ஓர் இடத்தில் கட்டம்போட்டு,அதில் சில கோடுகள் போட்டு,அதன்மீது சிறு வைக்கோலை வைத்துப் பாட்டுப்பாடி எரிப்பார்கள். அதனைத்தாண்டிப் பேய் பிடித்திருப்பவர் வரவேண்டும். பூசாரிக்குரிய பணத்தையும், வேட்டித்துண்டையும் கொடுத்துவிட்டு,சாமியை வணங்கி வீட்டிற்குச் சென்று விடுவார்கள். பின்னர் அன்று இரவு பச்சை போடுவார்கள்.பச்சை போடுதல் என்பது அன்று இரவே, மாவு,சர்க்கரைப்பொங்கல்,திண்பண்டங்கள்,தேங்காய்,வாழைப்பழம்,பத்தி,சாம்பிராணி, வேட்டித்துண்டு ஆகியவற்றைச் சாமியின் முன் வைத்து,பேய் பிடித்திருந்தவரைக் கொலுவில் வைத்து,மூன்று மணிநேரத்திற்குக் குறையாமல் சாமியை வேண்டிப் பாட்டுப் பாடுவார்கள்.இறுதியில்,சாமியை வேண்டித் தீருநீர் இட்டும் மடித்தும் கொடுப்பார்கள். இத்துடன் பேய் ஓட்டுதல் முடிந்துவிடும்.

முடிவுரை

பேய் ஓட்டுகின்றபொழுது பாடப்படுகின்ற பாடல்களைத் தொகுத்தால், இன்னும் பல செய்திகளை அறிய முடியும். பேய் ஓட்டுதல் பற்றி மேலும் ஆய்வு மேற்கொள்பவருக்கு இக்கட்டுரை ஓரு வழிகாட்டியாக அமையும் என நம்பலாம்.

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் நண்பரே

தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே இத்துடன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பினைக் கொடுத்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

அ.சின்னதுரை said...

வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே.

RaThi Mullai said...

தெரியாத தகவல்கள் பல. நன்றி

அ.சின்னதுரை said...

தங்களுக்கு நன்றி ரதி முல்லை அவர்களே!

Post a Comment